Wednesday, August 5, 2009

சினேகாவா? அல்லது அவர் தங்கச்சியா?

திருதிரு துறுதுறு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. கமல், கே.எஸ்.ரவிக்குமார், கவுதம் மேனன், மிஷ்கின் இவர்களுடன் சினேகாவும் கலந்து கொண்ட விழாவில், ஒவ்வொருவரையும் ஒரு திருதிரு அனுபவத்தை சொல்ல சொல்லி கேட்டார்கள். அவர்களும் தங்கள் மலரும் நினைவுகளை அவிழ்க்க, நல்ல கலகலப்பு.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து படையப்பா எடுக்கும் போது கிடைத்த திருதிரு அனுபவத்தை சொன்னார் கே.எஸ்.ரவிகுமார். “சிவாஜி சார் செயின் ஸ்மோக்கர். அப்புறம் அந்த பழக்கத்தை முற்றிலுமாக விட்டு விட்டார். சிகரெட் வாசனையே அலர்ஜி என்கிற அளவுக்கு அந்த விஷயத்தில் கெடுபிடியாக இருந்தார். படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு வந்துவிட்டால் பேக்கப் சொல்கிற வரைக்கும் செட்டை விட்டு வெளியே போகவே மாட்டார். இது அவரது வழக்கம். எனக்கும் ரஜினி சாருக்கும் சிகரெட் இல்லையென்றால் வேலையே நடக்காது. என்ன செய்வது? அங்கே தட்டு முட்டு சாமான்கள் கிடக்கும் இடத்தில் போய் ரகசியமாக தம் அடித்துவிட்டு வருவோம். ஒரு முறை என்னடா சிகரெட் ஸ்மெல் வருது. இங்கே எவன் சிகரெட்டை பிடிச்சிட்டு வந்தது? என்று சிவாஜி சார் கேட்க, நாங்கள் ரெண்டு பேரும் திருதிருன்னு முழிச்சோம்” என்றார் கே.எஸ்.ரவிகுமார். எப்படி சமாளித்தார்கள் என்பதையும் அவர் சொல்ல, பயங்கர கலகலப்பு.
கமல் சார் அனுபவம் இன்னும் பிரமாதம். “தேவர் மகன் படப்பிடிப்பில் ஒரு காட்சி. சிவாஜி சார் நடிச்சு முடிச்சிட்டார். நான் டைரக்டர் காதருகே போய் இன்னொரு முறை கேட்டா, இதை விட பிரமாதமா நடிச்சு காட்டுவார். கேளுங்க என்றேன். இதை கவனித்துவிட்டார் சிவாஜி சார். என்னங்க முதலாளி? இன்னொரு ஷாட் எடுக்கணுமா என்றார். நான் திருதிருன்னு முழிக்கலே. ஆமாம் என்றேன் தைரியமாக. அதற்கு பிறகு அவர் நடித்து காட்டியது இன்னும் அற்புதம். 19 ம் நூற்றாண்டில் 20 ம் நூற்றாண்டின் நடிப்பை அவரிடம் வாங்கினோம். எனது படங்களில் கூட, எப்படி நடிக்கணும்னு சொல்லுங்க என்று டைரக்டரை கேட்பேன். கேட்டால்தான் இன்னும் விதவிதமாக நடிக்க முடியும்” என்ற கமல், விழாவுக்கு வந்திருந்த சினேகாவை புகழ்ந்ததுதான் அனைவருக்கும் ஆச்சர்யம்.
“சினேகாவுக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க என்பதையே இங்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். முன்னாடியே தெரிஞ்சிருந்தா, வசூல் ராஜாவிலே அவங்களையே நடிக்க வைத்திருக்கலாம்” என்றார். முன் வரிசையில் உட்கார்ந்திருந்த சினேகாவின் முகத்தை பார்க்க வேண்டுமே!
இயக்குனர் நந்தினி பேசும் போது பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த போது சிறந்த குறும்படத்திற்கான விருதை கமல் சார் கைகளால் வாங்கினேன். இன்று அவரே என் படத்தின் ஆடியோவை வெளியிடுவது ரொம்ப மகிழ்ச்சி என்றார்.

No comments:

Post a Comment